| சேது சமுத்திர திட்டம், மதத்தின் பெயரால் தடுக்கப்படுகிறது கவிஞர் கனிமொழி எம்.பி. வேதனை |
|
|
| வா.கி.குமார் | |
| 18. August 2008 18:06 | |
|
கல்வி நிதியுதவி வேலூர் அருகே திருமலைக்கோடியில் உள்ள நாராயணி பீடம் சார்பில் `வித்யா நேத்ரம்' என்ற திட்டத்தின் கீழ் கல்வி உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தின் கீழ், மாநிலம் முழுவதும் 300 மாணவ-மாணவிகளுக்கு உயர்கல்விக்கான கல்விநிதியுதவி வழங்கும் விழா, சக்திஅம்மா தலைமையில் நேற்று நடைபெற்றது. எம்.பி.பி.எஸ்., என்ஜினீயரிங், டிப்ளமோ, நர்சிங், இளநிலை பட்ட வகுப்புகள் ஆகியவற்றில் படிக்கும் மாணவ, மாணவிகள் 300 பேருக்கு ரூ.75 லட்சம் கல்வி நிதியுதவி வழங்கப்பட்டது. விழாவில் கவிஞர் கனிமொழி எம்.பி. சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கல்வி நிதியுதவியை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:- நாத்திகர்கள் சக்தி பீடத்தில், தொடர்ந்து நாத்திகர்களையே சக்திஅம்மா அழைத்துவந்து விழா நடத்துகிறார்களே என்று பலரும் நினைக்கலாம். அந்த கேள்வி எனக்கும் எழுகிறது. ஏனென்றால் இதற்கு முன்பு இங்கே நடந்த விழாவில் தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி கலந்துகொண்டார். அவர் ஈரோட்டு பாசறையில் வந்தவர். இன்றைக்கு உங்களால் அன்புடன் அழைக்கப்பட்டு இருக்கிற நானும் அவரது அடிஒற்றி வந்தவள் தான். என்னை பீடத்தின் சார்பில் ஒருவர் அழைக்க வந்தபோது, `நான் வருவது பற்றி ஒன்றுமில்லை. எனக்கு மதநம்பிக்கை இல்லை' என்று சொன்னேன். மதத்திற்கும், ஆன்மிகத்திற்கும் இடையே வேறுபாடு இருக்கிறது. மதம் வாழ்க்கையை நெறிப்படுத்துகிற ஒன்று. எல்லோரும் தாங்கள் நினைத்த மாதிரி வாழ்ந்துவிட முடியாது. வாழ்க்கையை நெறிப்படுத்துகிற விஷயமாக மதத்தை பார்க்கவேண்டும். ஆனால் பல சந்தர்ப்பங்களில் மதம் என்பது எல்லைக் கோடுகளை சற்று தாண்டி, எங்கே நாம் மதிக்கவேண்டுமோ அதையும் தாண்டி, மதம் தலைக்கு மேல் ஏறும் காலத்தையும் சந்தித்துக் கொண்டு இருக்கிறோம். சேதுசமுத்திர திட்டம் மதம் அரசியல் ஆக்கப்பட்டு வருகிறது. மக்களுக்கு நியாயமாக வந்து சேரவேண்டிய திட்டம் சேதுசமுத்திர திட்டம். அது மதத்தின் பெயரால் நம்பிக்கையின் பெயரால் ஏதோ ஒன்றின் பெயரால் தடுக்கப்படும்போது அதை எதிர்க்க வேண்டியது இருக்கிறது. அதனால் தான் முதல்-அமைச்சர் கருணாநிதி, சேதுசமுத்திர திட்டத்தை பற்றி குரல் கொடுத்து வருகிறார். திராவிட இயக்கங்கள் இது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. மக்களுக்கு பூர்த்திசெய்ய வேண்டிய தேவைகள், மக்களுக்கு போய் சேரவேண்டியது அவசியம். மக்கள் வித்தியாசம் இல்லாமல் வாழவேண்டும். எல்லோருக்கும் எல்லா சந்தர்ப்பங்களையும் கொடுக்கவேண்டும். இளைஞர்களின் எதிர்காலம் நாராயணி பீடத்தில் இதற்கு முன்பு நடந்த விழாவில் இருதய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிதியுதவி கொடுத்தனர். தொடர்ந்து வாழ முடியுமா? என்கிற நம்பிக்கை இல்லாத குழந்தைகளுக்கு அவர்களுடைய உயிரை காப்பாற்றி பெற்றோர்களுடைய தவிப்பை போக்கினார்கள். 300 குழந்தைகளுக்கு அவர்களுடைய வாழ்க்கை திரும்ப கொடுக்கப்பட்டு உள்ளது. இங்கே வழங்கப்படுகிற உதவிதொகை இந்த ஆண்டுடன் நிறுத்தப்படாமல், தொடர்ந்து படிக்கிற கால கட்டம் முழுக்க இந்த பீடம் வழங்கும் என்று அறிவித்து இருக்கிறார்கள். முதல் ஆண்டில் உதவி தொகை வழங்கப்பட்டு அடுத்த ஆண்டு யாரிடத்தில் நிற்கவேண்டுமோ என்கிற கவலை இங்குள்ள மாணவ மாணவிகளுக்கு இல்லை. இது பெரிய விஷயம். மரக்கன்றுகள் நாராயணிபீடம் சார்பில் மரக்கன்றுகளை நடுவது பெரிய அளவில் நடக்கிறது. பூமியை பாதுகாக்கவேண்டும், அடுத்த தலைமுறைக்கு அழகான பூமியாக விட்டுச் செல்லவேண்டும் என்று பாடுபட்டு வரும் நாராயணி சக்தி பீடத்தை பாராட்டுகிறேன். மேற்கண்டவாறு கவிஞர் கனிமொழி எம்.பி. பேசினார். விழாவில், அமெரிக்க தொழிலதிபர் ரோன்மேனிக்ஸ், வேலூர் மாநகர மேயர் கார்த்திகேயன், எம்.எல்.ஏ.க்கள் ஞானசேகரன், காந்தி, முன்னாள் எம்.பி. முகமது சகி ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள். முடிவில் டிரஸ்டி சவுந்தரராஜன் நன்றி கூறினார். |
| < முந்தைய | அடுத்த > |
|---|





சேதுசமுத்திர திட்டம் மதத்தின் பெயரால், நம்பிக்கையின் பெயரால் தடுக்கப்படுகிறது என்று கவிஞர் கனிமொழி எம்.பி. வேதனையுடன் கூறினார்.
