5. December 2008 05:58
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
11. October 2008 23:48
3. October 2008 18:45
15. October 2008 12:52
13. October 2008 13:01
27. August 2008 15:01
தி.மு.க. அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர மாட்டோம் -டாக்டர் ராமதாஸ் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
19. August 2008 05:54
 ramdass.jpg"தி.மு.க. அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர மாட்டோம்'' என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் திருச்சியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

மது ஒழிப்பு மாநாடு

தமிழ்நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் மது ஒழிப்பு மாநாடு நடத்தப்படும். திருச்சியில் நடைபெற்ற மாநாடு 6-வது மாநாடாகும். இதுவரை ராமநாதபுரம், கன்னியாகுமரி, செங்கல்பட்டு, கல்லிடைகுறிச்சி ஆகிய பகுதிகளில் மது ஒழிப்பு மாநாடு சிறப்பாக நடைபெற்றது.

தமிழ்நாட்டில் மது விற்பனை தமிழக மக்களை வறுமைக்கோட்டுக்கு தள்ள செய்யும். 2008-2009-ம் ஆண்டு மது விற்பனையை ரூ.10 ஆயிரம் கோடி என்று தமிழக அரசு இலக்கு நிர்ணயித்து உள்ளது.

அடுத்த கட்டமாக பாக்கெட் சாராயம் விற்பனையை தமிழ்நாட்டில் கொண்டு வருவார்கள். இதன் மூலமாக தமிழக மக்களை குடிகாரர்களாக்கி, அரசு வருமானத்தை பெருக்குவார்கள். எனவே தான் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று மாவட்டந்தோறும் மாநாடு நடத்தி வருகிறோம்.

மாநில சுயாட்சி எங்கே?

தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி சுதந்திர தின விழாவில் பேசுகையில், மாநில சுயாட்சி பற்றி பேசவில்லை.

குறிப்பாக காவிரி நதிநீர் பிரச்சினை, சேதுசமுத்திர திட்டம், ஆறுகள் இணைப்பு, கேரளாவில் மேற்கே பாயும் நதிகள் கடலில் வீணாகும் நீரை தமிழ்நாட்டுக்கு கேட்பது, முல்லை பெரியார் அணை பிரச்சினை, பாலாற்றில் தடுப்பு அணை கட்டுவது பிரச்சினை பற்றி பேசாமல் விட்டுவிட்டார்.

மாநில சுயாட்சி பற்றியும் எந்த கருத்து தெரிவிக்கவில்லை. இது ஏமாற்றத்தை அளிக்கிறது.

தமிழக கச்சத்தீவு பக்கத்தில் மீன்பிடித்த 4 மீனவர்கள் மீது இலங்கை ராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். இதில் அவர்கள் காயம் அடைந்தனர்.

இது குறித்து மத்திய அரசுக்கு வழக்கம் போல முதல்-அமைச்சர் கடிதம் வருகிறார். இது போன்ற சம்பவங்களை தடுக்க எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

செயல்வழி கல்வி

தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு 133 தனியார் பொறியியல் கல்லூரியை தொடங்கி இருக்கிறார்கள். நாங்கள் அரசு கல்லூரியை தொடங்க வேண்டும் என்று சட்டசபையில் கேட்டதால், 6 அரசு பொறியியல் கல்லூரிகளை தொடங்கி உள்ளனர். அந்த கல்லூரிகளும் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகின்றன.

ஆந்திராவில் உள்ள செயல்வழி கல்வி முறையை தமிழ்நாட்டில் புகுத்தி உள்ளனர். இதன்படி 1-வது வகுப்பு முதல் 5-வது வகுப்பு வரை படத்தில் இருப்பதை பார்த்து படித்தால், குழந்தைகள் எழுத படிக்க தெரியாதவர்கள் ஆகி விடுவார்கள் எனவே இந்த செயல்வழி கல்வி முறை வேண்டாம் என்று கூறி வருகிறோம்.

சமச்சீர் கல்வி முறையை கொண்டு வருகிறோம் என்று கூறிவிட்டு, சமச்சீர் கல்வி குறித்து பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முத்துக்குமரன் கொடுத்த அறிக்கை தலைமை செயலகத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ளது. கல்வியில் பொது கல்வி முறை கொண்டு வர வேண்டும்.

அது போல, 10 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம் என்று சொல்கிறார்கள். ஆனால் ஆண்டுதோறும் 2 ஆயிரம் ஆசிரியர்கள் தான் நியமனம் செய்கிறார்கள் என்று ஆசிரியர்கள் சங்கத்தினர் திடுக்கிடும் தகவல்கள் தெரிவித்து உள்ளனர்.

இன்னும் தமிழ்நாட்டில் ஆரம்பப்பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இது குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் அவர் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

காங்கிரஸ் பதில்

கேள்வி:- தி.மு.க., அ.தி.மு.க. அல்லாத கூட்டணி காங்கிரஸ் தலைமையில் அமைய வேண்டும் என்று கூறினீர்கள். இது தொடர்பாக காங்கிரஸ் எந்த வித பதிலும் அளிக்கவில்லையே?

பதில்:- இன்னும் தேர்தலுக்கு நிறைய நாட்கள் இருக்கிறது. அடுத்த ஆண்டு மே மாதம் தேர்தல் வரும் போது, தமிழ் நாட்டில் தனி மெஜாரிட்டி இல்லாத தி.மு.க. கட்சி பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலை நடத்த வேண்டும் என்று கூறலாம்.

மத்திய அரசில் தி.மு.க. தங்களுக்கு வேண்டிய துறைகளை கேட்டு ஆட்சியில் பங்கேற்று இருப்பதை போல, தமிழ்நாட்டிலும் காங்கிரசுக்கு ஆட்சியில் பங்கு கொடுக்க வேண்டும்.

நம்பிக்கையில்லா தீர்மானம்

கேள்வி:- தி.மு.க. அரசின் மீது நீங்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவீர்களா?

பதில்:- பா.ம.க. தன்னிச்சையாக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வராது. ஆனால் கம்ïனிஸ்டு கட்சிகள் வெளியே வரும் சூழ்நிலை இருப்பதால், அவர்கள் தி.மு.க.வின் மீது சட்டசபையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தால், அதற்கு பா.ம.க. கட்சி ஆதரவு கொடுக்கும்.

கேள்வி:-அ.தி.மு.க. நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் ஆதரிப்பீர்களா?

பதில்:-அ.தி.மு.க. கட்சி நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து, அதை காங்கிரஸ் கட்சி ஆதரித்தால், அதை பா.ம.க. ஆதரிக்கும்.

அ.தி.மு.க. கூட்டணி

கேள்வி:- பா.ம.க., கம்ïனிஸ்டு கட்சிகள் அ.தி.மு.க.வுக்கு வந்தால் வரவேற்போம் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா சொல்லி உள்ளார். அது பற்றி உங்களுடைய கருத்து என்ன?

பதில்:- இது அவருடைய கருத்து.

கேள்வி:- தேர்தல் கூட்டணி குறித்து உங்கள் முடிவு என்ன?

பதில்:- கூட்டணி குறித்து தேர்தல் சமயத்தில் தெரிவிக்கப்படும். அரசியலில் எப்போது எதுவும் நடக்கலாம்.

கேள்வி:- ஆந்திராவில் நடிகர் சிரஞ்சீவி அரசியல் கட்சி தொடங்குவது குறித்து உங்கள் கருத்து என்ன?

பதில்:- அது பற்றி கருத்து கூற விரும்பவில்லை.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறினார்.

குருவுடன் சந்திப்பு

முன்னதாக டாக்டர் ராமதாஸ் திருச்சி மத்திய சிறைச்சாலைக்கு சென்று காடுவெட்டி குருவை சுமார் 15 நிமிடங்கள் சந்தித்து பேசினார். அதைத்தொடர்ந்து சிறைக்கு வெளியே வந்த அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தனிமையில்

சிறையில் குருவை சந்தித்து பேசினேன். குரு நன்றாக இருக்கிறார். அவரை சிறைச்சாலையில் உள்ள தனிஅறையில் வைத்து உள்ளனர். அவர் எங்களுக்கு ஆறுதல் கூறினார். நான் அவருக்கு ஆறுதல் கூறினேன்.

குரு பிரச்சினை தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் கோரிக்கை மனுவை கொடுத்து உள்ளோம். அவர்கள் மனுவை பெற்றுக்கொண்டு ஆவன செய்வதாக கூறியுள்ளார்கள்.

குரு பிரச்சினை தொடர்பாக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளோம். இந்த பிரச்சினையை சட்டரீதியாக சந்தித்து வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

 

 
< முந்தைய   அடுத்த >