| தலித், முஸ்லிம் ஒற்றுமையை எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது -திருமாவளவன் |
|
|
| வா.கி.குமார் | |
| 20. August 2008 06:13 | |
கல்பாக்கத்தில் நடந்த பிரச்சினையை சிலர் பெரிதாக்க பார்க்கிறார்கள் என்றும், எந்த சக்தியாலும், தலித், முஸ்லிம் ஒற்றுமையை பிரிக்க முடியாது என்றும் திருமாவளவன் கூறினார்.
தாக்குதல் சம்பவம் கல்பாக்கத்தை அடுத்த புதுப்பட்டிணத்தில் உள்ள ஓட்டல் ஒன்றிற்கு, கடந்த 17-ந் தேதி விடுதலைச்சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் சிலர் சாப்பிட சென்றுள்ளனர். பின்னர், சாப்பிட்டதற்கு பணம் கொடுக்க மறுத்து, கடை உரிமையாளர் பாஷா என்பவர் உள்பட பலரை தாக்கினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சிறிய உரசல்கூட இல்லை கடந்த 17-ந் தேதி சென்னையில் நடந்த விழா ஒன்றில் பங்கேற்க, விடுதலைச்சிறுத்தைகள் தொண்டர்கள் வந்தனர். கல்பாக்கத்தை அடுத்த புதுப்பட்டிணம் என்னும் இடத்தில் வந்தபோது விடுதலைச்சிறுத்தை தொண்டர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதுவரை, தமிழகத்தில் முஸ்லிம்களுக்கும், விடுதலைச்சிறுத்தைகளுக்கும் இடையே சிறிய உரசல் கூட ஏற்பட்டதில்லை. தலித் மக்கள் பாதிக்கப்படும்போது, அவர்களுக்கு ஆதரவளித்து பக்கபலமான சமூகமாக முஸ்லிம் சமுதாயம் இருந்து வருகிறது. நல்லிணக்கம், நட்போடு கைகோர்த்து செயல்பட்டு வருகிறோம். உறுதி ஏற்போம் இந்த நிலையில், 17-ந் தேதி நடந்த நிகழ்வு எதிர்பாராத வேதனை அளிக்கும் நிகழ்வாகும். இதேபோலான நிகழ்வு தமிழகத்தில் இனி நடக்காது. தலித், முஸ்லிம் ஒற்றுமையை விரும்பாத அமைப்பினர் சிலர் இந்த பிரச்சினையை ஊதி பெரிதாக்க பார்க்கிறார்கள். இதனால், தலித், முஸ்லிம்கள் எச்சரிக்கையாக இருந்து, ஒற்றுமையாக இருக்க உறுதி ஏற்போம். அன்று உணவு விடுதியில் நடந்த பிரச்சினை, அங்கேயே முடியும் சூழ்நிலையில் இருந்துள்ளது. ஆனால், போலீஸ் துறையினர்தான் வாகனங்களை தடுத்து திரும்பி போகச் சொல்லியுள்ளனர். இதனால், ஆயிரக்கணக்கான வாகனங்கள் கல்பாக்கத்தில் இருந்து மரக்காணம் வரை நின்றுள்ளன. சில இடங்களில், வண்டிகளை திருப்ப முடியாது என்று விடுதலைச்சிறுத்தை தொண்டர்கள் போலீசிடம் கூறியுள்ளனர். போலீஸ் அணுகுமுறை சரியில்லை இதனால் போலீசார் துப்பாக்கி கட்டைகளால் விடுதலைச்சிறுத்தை தொண்டர்கள் வந்த 60 வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்துள்ளனர். போலீஸ் துறையின் அணுகுமுறைதான் சரியில்லை. விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பில் முஸ்லிம் இளைஞர்கள் இணைகிறார்கள். கட்சியின் பொருளாளராக முகமது ïசுப் என்ற முஸ்லிம் இளைஞரைத்தான் நியமித்துள்ளோம். மாவட்ட நிர்வாகிகளிலும் முஸ்லிம் இளைஞர்களுக்கு இடம் கொடுத்துள்ளோம். இந்த நிலையில், தலித், முஸ்லிம் ஒற்றுமையை விரும்பாத சிலர், இந்த பிரச்சினையில் புகுந்து பெரிதாக்க பார்க்கிறார்கள். கல்பாக்கத்தில் நடந்த பிரச்சினையை தொடர்ந்து, அன்றைய தினம் தஞ்சை, திருச்சி, மதுரையில் உள்ள முஸ்லிம்களின் கடைகளை எல்லாம் போலீசார் மூடச்சொல்லியுள்ளனர். சென்னையில் தான் அன்று விடுதலைச்சிறுத்தைகள் விழா நடந்தது. அப்படி இருக்கையில், ஏன் மற்ற இடங்களில் கடைகளை அடைக்க சொல்ல வேண்டும். எதிர்பாராத சம்பவம் எந்த சக்தியாலும் தலித், முஸ்லிம் ஒற்றுமையை பிரிக்க முடியாது. பகை உணர்ச்சி அடிப்படையில் இந்த பிரச்சினை நடக்கவில்லை. எதிர்பாராமல் நடந்த சம்பவம்தான். இந்த பிரச்சினை தொடர்பாக முதல்-அமைச்சர் கருணாநிதியை சந்தித்து பேச உள்ளோம். அதற்குமுன்னர், தாக்குதலின்போது காயம் அடைந்து சிகிச்சை பெற்றுவருபவர்களை சந்தித்து ஆறுதல்கூற செல்கிறேன்.இவ்வாறு தொல்.திருமாவளவன் கூறினார். இந்த பேட்டியின்போது, தேசிய லீக் மாநில தலைவர் பஷீர் அகமது, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக பொது செயலாளர் ஹைதர் அலி, மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் தலைவர் உமர்பரூக், கல்பாக்கம் ஜமாத் தலைவர் சகீர் அகமது, நயினார் முகமது, பீர் முகமது உள்பட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
|
| < முந்தைய | அடுத்த > |
|---|






கல்பாக்கத்தில் நடந்த பிரச்சினையை சிலர் பெரிதாக்க பார்க்கிறார்கள் என்றும், எந்த சக்தியாலும், தலித், முஸ்லிம் ஒற்றுமையை பிரிக்க முடியாது என்றும் திருமாவளவன் கூறினார்.
