| மக்கள் பிரச்சினைக்காக போராட காங்கிரஸ் தயங்காது - கே.வி.தங்கபாலு |
|
|
| வா.கி.குமார் | |
| 20. August 2008 06:32 | |
|
ஜி.கே.மூப்பனார் பிறந்தநாள் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் மறைந்த ஜி.கே.மூப்பனாரின் 78-வது பிறந்தநாள் விழாவும், தியாகி சத்தியமூர்த்தியின் 122-வது பிறந்தநாள் விழாவும் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. விழாவுக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.வி.தங்கபாலு தலைமை தாங்கினார். சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் டி.சுதர்சனம், டி.யசோதா எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜி.கே.மூப்பனார், தியாகி சத்தியமூர்த்தி ஆகியோரின் திருவுருவப்படங்களுக்கு கே.வி.தங்கபாலு மலர் தூவி மரியாதை செலுத்தினார். விழாவில் அவர் பேசியதாவது:- ஜி.கே.மூப்பனார் தேசிய குடும்பத்திலே பிறந்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியிலே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். அவரிடம் இருந்த எளிமை, அன்பு, கனிவான பார்வை ஆகியவைகளே அவரை மாபெரும் தலைவராக ஆக்கின. ஏழைகளுக்கு இரக்கம் காட்டும் தலைவராக விளங்கியது இந்திய வரலாற்றில் அவர் ஒருவர்தான். த.மா.க. இணைப்பு நேரு குடும்பத்துக்கு கட்டுப்பட்டவராக காங்கிரஸ் கட்சியின் சிறந்த தளபதிகளில் ஒருவராக அவர் விளங்கினார். மிகவும் வசதி படைத்தவராக இருந்தாலும் ஏழை, எளியவர்களை மதிக்கும் பண்புக்கு இலக்கணமாக விளங்கினார். 1996-ல் த.மா.க.வை மிகுந்த வருத்தத்துடன் தொடங்கிய அவர் அப்போதைய ஆட்சி மாற்றத்துக்கு வழிகண்டார். அப்போது நான் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்தேன். மூப்பனார் மறைவுக்கு ஒரு நாள் முன்பு அவரை சந்தித்தேன். அப்போது அவர், "நான் ஒரு வாரத்தில் குணமாகி விடுவேன். நாம் இருவரும் டெல்லி சென்று காங்கிரசுடன் த.மா.க.வை இணைக்க பேசலாம்'' என்றார். ஆனால் மறுநாள் அவர் மறைந்து விட்டார். பயந்தது இல்லை அவருடைய எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் காங்கிரசுடன், ஜி.கே.வாசன் த.மா.க.வை இணைத்தார். ஜி.கே.மூப்பனார் எதை விரும்பினாரோ, அதை செயல்படுத்தினார். அவருக்கு நன்றி பாராட்ட கடமைப்பட்டு இருக்கிறேன். ஜி.கே.வாசன், இளங்கோவன், ப.சிதம்பரம், கிருஷ்ணசாமி ஆகிய தலைவர்களிடம் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. நாங்கள் அனைவரும் இணைந்தே செயல்பட்டு வருகிறோம். காங்கிரஸ் தன் போராட்ட குணத்தை இழந்துவிட்டதாக, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஜி.விநாயகமூர்த்தி இங்கு பேசினார். போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி எப்போதும் பயந்தது இல்லை. தேவைப்பட்டால் எந்த சூழ்நிலையிலும் மக்கள் பிரச்சினைகளுக்காக போராட்டம் நடத்துவோம்.இவ்வாறு கே.வி.தங்கபாலு பேசினார். இருதய பரிசோதனை ஞானதேசிகன் எம்.பி., முன்னாள் எம்.பி.பூவராகவன், எஸ்.ஜி.விநாயகமூர்த்தி, பாரமலை, போளூர் வரதன் எம்.எல்.ஏ., இளைஞர் காங்கிரஸ் தலைவர் மïரா ஜெயக்குமார், பொதுசெயலாளர் ராஜ்குமார், பிஜுசாக்கோ, மகிளா காங்கிரஸ் தலைவர் சாய்லட்சுமி, பானுலாரன்ஸ், மத்திய சென்னை மாவட்ட பொதுசெயலாளர் எஸ்.கே.அகமதுஅலி, பட்டுகோட்டை ராஜேந்திரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக, காங்கிரஸ் நிர்வாகி ஆர்.தாமோதரன் அனைவரையும் வரவேற்றார். டி.எல்.மகாலிங்கம் நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சி முடிவடைந்ததும், ஜி.கே.மூப்பனார், ராஜீவ்காந்தி ஆகியோரின் பிறந்த நாளையொட்டி, இளைஞர் காங்கிரஸ் சார்பில் நடைபெறும் இலவச இருதய பரிசோதனை முகாமை கே.வி.தங்கபாலு தொடங்கி வைத்தார்.
|
| < முந்தைய | அடுத்த > |
|---|





மக்கள் பிரச்சினைக்காக போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி தயங்காது என்று கே.வி.தங்கபாலு பேசினார்.
