| வடபகுதி மீதான போர் நடவடிக்கைகளுக்கு அரசு விரைவில் நல்லதோர் பாடத்தைக் கற்றுக்கொள்ளும் |
|
|
| வா.கி.குமார் | |
| 20. August 2008 13:35 | |
|
இடதுசாரி முன்னணியின் வடமத்திய மாகாணசபை தேர்தல் பிரசாரக் கூட்டம் அநுராதபுரம் ஐம்பது கடைத்தொகுதி பகுதியில் நடைபெற்றபோது கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது; போர் வெறியுடன் அலையும் இந்த அரசாங்கம், வட பகுதி மீதான போர் முயற்சிக்கு விரைவில் நல்லதோர் பாடத்தை கற்பார்கள். கண்டியை கைப்பற்ற பறங்கியர் முயன்றபோது கண்டி மக்கள் நகரை காலிசெய்துவிட்டு காட்டுப் பகுதிகளில் பதுங்கிக் கொண்டனர். எதிர்ப்பு இல்லையே என எண்ணிய பறங்கியப் படை கண்டிக்குள் உல்லாசமாக பிரவேசித்தது. இரண்டு தினங்கள் கழித்து கண்டிய மக்கள் உக்கிரதாக்குதல் தொடுத்தனர். பறங்கிப்படை சின்னாபின்னம் ஆகியது. இது கண்டிய வரலாறு தந்த பாடமாகும். எதுவித எதிர்ப்பையும் காட்டாது விடுதலைப்புலிகள் தொடர்ந்து பின் வாங்குவது பெரும் அழிவை அரச படைக்கு கொடுப்பதற்கு என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மையாகும். இதை உணராத மகிந்த அரசாங்கம் அப்பாவி சிங்கள இளைஞர்களை தமது இருப்பை காப்பாற்றுவதற்காக பலி கொடுக்க தயாராகிறது. வடமத்திய மாகாண சபை பொதுஜன முன்னணி முதலமைச்சர் வேட்பாளர் பேட்டி பிரேமலால் இந்த தேர்தலை சர்வஜன வாக்கெடுப்பு எனக்கூறியுள்ளார். நாமும் கூறுகின்றோம் வயிற்றுப்பசியால் வாடும் மக்கள் வழங்க இருக்கும் தீர்ப்பு ஆட்சியாளர்களுக்கு சர்வஜன வாக்கெடுப்பு ஆக நிச்சயம் அமையும். மேலும் மகிந்த ராஜபக்ஷ கண்டியில் ஒரு கூட்டத்தில் பேசுகின்றபோது, தென் னிலங்கை தாய்மார்கள் அரசுக்கு எதிராக அவர்கள் பிள்ளைகள் நடத்தும் போராட்டங்களை ஆதரிக்க வேண்டாம் என்றும் பிள்ளைகள் போராட்டங்களில் ஈடுபடுவதை தடுக்குமாறும் கோரியுள்ளார். மாணவர்கள் கொள்ளுப்பிட்டியில் நடத்திய போராட்டத்தை போன்ற போராட்டங்களை எதிர்காலத்தில் முன்னெடுக்க வேண்டாம் என்றும் அது தனது தாய் நாட்டைக் காக்கும் முயற்சிக்கு தடையாக அமைகிறது என்றும் கூறியுள்ளார். இவ்வாறு கூறும் மகிந்த ராஜபக்ஷ தமிழ் தாய்மார்களை பார்த்து எதனைக் கூறமுடியம். இன்று இந்த நாட்டில் இரண்டு யுத்த முனைகள் உள்ளன. ஒன்று வன்னிப்பகுதியில் உரிமை போராட்டத்துக்கான போர்முனையும் இங்கே கொள்ளுப்பிட்டியில் சிங்கள இளைஞர் புதிய போர்முனையையும் தொடங்கியுள்ளனர். இன்று பிரபாகரனும் சோமவன்சவும் ஒரே திசையில் பயணிக்கின்றனர். இதை நாம் வரவேற்கின்றோம் இவர்கள் இருவரினதும் பொது எதிரியாக இலங்கை அரசாங்கம் மாறியுள்ளது. நிவித்திகலை பகுதியில் அரச காடையரை ஜே.வி.பி.விரட்டியதை நாம் நேரடியாகவே பார்த்தோம். மீண்டும் ஒரு பொது வேலைநிறுத்தம் நடைபெற இருக்கிறது. நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்தால் இந்த கொடிய ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்பும் நாள் வெகு தூரத்தில் இல்லை.
|
| < முந்தைய | அடுத்த > |
|---|






போர் வெறியுடன் அலையும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் வடபகுதி மீதான போர் நடவடிக்கைகளுக்கு விரைவில் நல்லதோர் பாடத்தைக் கற்றுக்கொள்ளப் போகிறார்கள் என்று இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
