| அரசியலில் நடிகர் சிரஞ்சீவி வெற்றி பெற காஞ்சி கோவிலில் யாகம் - சிரஞ்சீவி வராததால் ரசிகர்கள் ஏமாற்றம் |
|
|
| வா.கி.குமார் | |
| 23. August 2008 07:41 | |
|
அரசியலில் சிரஞ்சீவி
தெலுங்கு திரைப்பட சூப்பர் ஸ்டார், அரசியல் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார். அவருடைய அரசியல் பிரவேசம், ஆந்திர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வருகிற 26-ந் தேதி, திருப்பதியில் நடைபெறும் பிரமாண்ட மாநாட்டில் அவர் அதிகாரப்பூர்வமாக தனது கட்சியை தொடங்குகிறார். ஆந்திர முன்னாள் முதல்-மந்திரியும், பிரபல நடிகருமான என்.டி.ராமாராவ் கூட, திருப்பதியில் இருந்துதான் கட்சியை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. அரசியலில் சிரஞ்சீவி வெற்றி பெறுவதற்காக, ஆந்திர மாநிலம் திருப்பதி உள்பட பல இடங்களில் யாகங்களும், பூஜைகளும் நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள `கோவில் நகரமா'ன காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோவிலில் யாகம் நடத்துவது மிகவும் சிறப்பானது என்பதை அறிந்து அங்கு சிரஞ்சீவி சார்பில் நேற்று பெரிய அளவிலான யாகம் நடத்தப்பட்டது. நடிகர் சிரஞ்சீவி அரசியலில் வெற்றி பெறவேண்டும் என்று கோரியும், உலக நன்மைக்காகவும் இந்த யாக பூஜைக்கு விசாகப்பட்டினம் அருகில் உள்ள சோடாவரம் பகுதியை சேர்ந்த தொழில் அதிபர் கோத்தி ரெட்டி ஏற்பாடு செய்திருந்தார். பிரமாண்ட யாகம் இதற்காக, வியாழக்கிழமையன்று, காமாட்சியம்மன் கோவிலில் வேதபாராயணம் நடந்தது. இதில், கோவில் அர்ச்சகர் நடன அய்யர் தலைமையில் ஏராளமான வேத விற்பன்னர்கள் கலந்து கொண்டு வேத மந்திரங்களை ஓதினார்கள். நேற்று காலை 9.30 மணிக்கு, காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் உள்ள யாக மேடையில் சஹஸ்ரசண்டி எனும் ஹோமம் தொடங்கியது. இதற்காக பெரிய யாககுண்டம் அமைக்கப்பட்டிருந்தது. அதில் தீ வளர்த்து பிரமாண்ட யாகம் நடத்தப்பட்டது. அதன்பிறகு, 11 சிறுமிகளின் பாதங்களுக்கு பூஜை செய்யும் கன்னிபூஜை நடந்தது. 11 சிறுமிகளுக்கும் தண்ணீர் பாட்டில், பட்டுப் பாவாடை, சட்டை அளிக்கப்பட்டது. அதன்பிறகு, 11 சுமங்கலிப் பெண்களை சிறப்பிக்கும் சுஹாசினி பூஜை நடந்தது. அவர்களுக்கு, புடவை, ஹாட்-பாக்ஸ் போன்றவை அளிக்கப்பட்டன. இதுபோல், 11 வேதபாட மாணவர்களை வைத்து பிரம்மச்சரிய பூஜை நடந்தது. அவர்களுக்கும், ஆடைகள் வழங்கப்பட்டன. முன்னதாக, தம்பதிகள் பூஜையும் நடத்தப்பட்டது. இந்த யாகம் பகல் 1.30 மணி அளவில் முடிவடைந்தது. ரசிகர்கள் ஏமாற்றம் காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் யாகம் நடைபெறுவதை பார்க்க சிரஞ்சீவியுடன் படத்தில் நடித்த சந்தனா என்ற நடிகை வியாழக்கிழமையன்று வந்திருந்தார். இதைத்தொடர்ந்து நடிகர் சிரஞ்சீவியும், காஞ்சீபுரம் வருவார் என்று தகவல் பரவியது. ஆனால், போலீசார் சிரஞ்சீவி வருவதை உறுதி செய்யவில்லை. ஆயினும் நேற்று காலையிலேயே, சென்னை மற்றும் சுற்றுபுறப்பகுதியில் இருந்து நடிகர் சிரஞ்சீவியின் ரசிகர்கள் அவரை நேரில் பார்க்க காமாட்சி அம்மன் கோவிலுக்கு ஆவலுடன் வந்து காத்திருந்தார்கள். சென்னையில் இருந்து தெலுங்கு மற்றும் இந்தி உள்பட பல்வேறு டி.வி. சேனல்காரர்களும், பத்திரிகையாளர்களும் காமாட்சியம்மன் கோவிலில் குவிந்திருந்தார்கள். யாகம் தொடங்கி நடைபெற்றதே தவிர, நடிகர் சிரஞ்சீவி வரவே இல்லை. காரணம் கேட்டபோது, `நேற்றைய தினம் சிரஞ்சீவியின் பிறந்தநாள் என்பதால், அவர் தனது தாயாரோடு இருக்க விரும்பியதால், காஞ்சீபுரம் வரமுடியாமல் போய்விட்டது' என்று சொல்லப்பட்டது. இதைத் தொடர்ந்து, ரசிகர்களும், பத்திரிகையாளர்களும் அங்கிருந்து ஏமாற்றத்துடன் கலைந்து சென்றார்கள்.
காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலுக்கு நடிகர் சிரஞ்சீவி வருவதாக சொல்லப்பட்டதால், அவரைப் பார்க்க, திருத்தணியில் உள்ள தமிழ்நாடு தெலுங்கு மக்கள் சங்க பிரதிநிதிகளும் வந்து காத்திருந்தார்கள். அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:- நடிகர் சிரஞ்சீவி அரசியலில் வெற்றி பெற்று முடிசூடா மன்னனாக திகழ வேண்டும் என்பது எங்கள் ஆசை. அதற்காக, பண்டைய காலத்தில் மன்னர்கள் நடத்தியதைப் போல் அசுவமேத யாகம் நடத்த இருக்கிறோம் (மன்னர் சார்பாக ஒரு குதிரையை பல இடங்களுக்கு அனுப்பி அது யார் ஒருவராலும் பிடித்து கட்டப்படாமல் திரும்பி, புறப்பட்ட இடத்துக்கே வருவது அசுவமேத யாகம் எனப்படும். இது மன்னரின் செல்வாக்கை காட்ட கடைப்பிடிக்கப்பட்ட ஒரு வழக்கமாகும்). இதற்காக கோயம்புத்தூரில் இருந்து ஒரு அழகிய வெள்ளை குதிரையை தேர்ந்தெடுத்து இருக்கிறோம். அந்த குதிரைக்கு தலையில் ராஜசுழி இருப்பதால் அது தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த குதிரையை செப்டம்பர் மாதத்தில் ஒரு வாகனத்தில் ஏற்றி ஆந்திரா முழுவதையும் சுற்றி வரச் செய்ய இருக்கிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
|
| < முந்தைய | அடுத்த > |
|---|





நடிகர் சிரஞ்சீவி அரசியலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நேற்று யாகம் நடத்தப்பட்டது. சிரஞ்சீவி வருகையை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்கள் அவர் வராததால் ஏமாற்றம் அடைந்தார்கள்.
