| தி.மு.க. தோழமை அணியில் இருந்து மார்க்சிஸ்ட் விலக முடிவு எடுத்துவிட்டனர் -கருணாநிதி |
|
|
| வா.கி.குமார் | |
| 23. August 2008 07:49 | |
|
முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அரசியல் ஆரூடம் கேள்வி:- "கர்நாடகம், இமாசலப்பிரதேசம், ஜார்கண்ட் மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் கூட்டணியின் தவறான பொருளாதாரக் கொள்கையினால் காங்கிரஸ் கட்சி மண்ணைக் கவ்வியுள்ளது என்பது வரலாறு; அதுபோல வரும் பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரசுடன், தி.மு.க. கூட்டணி தொடருமானால் அதே மண்ணைக் கவ்வும் நிலை தான் அவர்களுக்கும் ஏற்படும். காங்கிரஸ் என்கிற மூழ்கும் கப்பலில் தி.மு.க. பயணம் செய்ய விரும்பினால், அது அவர்களின் முடிவு'' என்று மார்க்சிஸ்ட் தலைவர் என்.வரதராசன் அரசியல் ஆரூடம் கணித்துள்ளாரே? பதில்:- காங்கிரஸ் என்பது மூழ்கும் கப்பல் என்பது தெரிந்த பிறகும் - அணு ஒப்பந்தம் நிறைவடையும் வரையில் அந்த மூழ்கும் (?) கப்பலைவிட்டு இறங்காமல் இருப்பதற்காக எத்தனை முறை டெல்லியிலே காங்கிரஸ் தலைவர்களுடன் கம்ïனிஸ்டு உயர்மட்டத் தலைவர்கள் "சம்பாஷணை'' நடத்தினார்கள் என்பதும்; எத்தனை முறை சென்னைக்கு "விஜயம்'' செய்தார்கள் என்பதும்; நாடும், ஏடும் நன்கு அறிந்த ரகசியங்களாயிற்றே! அப்போதெல்லாம் மாநிலங்கள் சிலவற்றில் காங்கிரஸ் தோற்றது இவர்கள் கவனத்துக்கு வரவில்லையா? சில மாநிலங்களில் காங்கிரஸ் தோற்றது தான், மார்க்சிஸ்ட்டுகள் விலகுவதற்கு உண்மையான காரணமா? அணு ஒப்பந்தம் என்று கூறியதெல்லாம் அதற்காக கண்டுபிடிக்கப்பட்ட ஒரு காரணமா? சுருண்டிருந்த சூழ்ச்சித்திரை அமைச்சரும், தி.மு.க. பொருளாளருமான ஆற்காடு வீராசாமியின் கம்ïனிஸ்டு பற்றிய பேச்சுக்கு நான் மறுப்பு தெரிவித்து விளக்க அறிக்கை வெளியிட்ட பிறகும்; "காங்கிரஸ் கப்பலுடன் சேர்ந்து தி.மு.க. மூழ்கிவிடப் போகிறது'' என்று தோழர் வரதராசனைப் போன்றவர்கள்; "ஆரூடம்'' கணிப்பதைப் பார்க்கும்போது; அவர்கள் தி.மு.க. தோழமை அணியில் இருப்பதில்லையென்று ஏற்கனவே திட்டமிட்டுவிட்டார்கள் என்பதும்; அதனால்தான் ஒரு மாத காலத்துக்கு முந்தியே அவர்கள் ஏடுகளிலும், மேடைகளிலும் தி.மு.க. எதிர்ப்புப் பிரசாரத்தை மெல்ல மெல்லத் தொடங்கி விட்டார்கள் என்பதும் தெளிவாகிறது! எது, எப்படியிருப்பினும் காங்கிரஸ் கப்பலில் ஏறி தி.மு.க. மூழ்கிவிடும் என்ற வரதராசனின் ஆரூடத்தை; என்னைப் பொறுத்தமட்டில் "அருளாசி''யாகவே கருதிக் கொள்கிறேன். எப்படியோ சுருண்டு கிடந்த "சூழ்ச்சித்திரை'' விரிந்து விட்டதைக் கண்ட பிறகாவது "விழிப்போடிருப்போம்'' என்று பெருமூச்சு விட்டுக் கொள்கிறேன். பா.ஜ.க-சி.பி.எம். உறவு? கேள்வி:- 1992-ம் ஆண்டில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அதன் பிறகு 1999-ல் அதே பா.ஜ.க.வுடன் இணைந்து மத்திய அரசில் இணைந்து ஆட்சி நடத்தியது தி.மு.க. என்று மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சித் தலைவர் ஒருவர் சொல்லியிருக்கிறாரே; பா.ஜ.க.வுடன் மார்க்சிஸ்ட் கட்சி எந்த காலத்திலும், எந்த மாநிலத்திலும் உறவு கொண்டது உண்டா இல்லையா? பதில்:- இந்த கேள்விக்கு இப்போது நான் நேரடியாகப் பதில் அளிப்பதைவிட, 9.3.2000 அன்று சட்டப் பேரவையில் கவர்னர் உரை மீதான விவாதத்திற்கு பதிலளித்து உரையாற்றியபோது, நான் பேசிய ஒரு குறிப்பிட்ட பகுதியை இங்கே விளக்கினால், அதுவே இந்த கேள்விக்கு பொருத்தமான பதிலாக அமையுமென்று கருதுகிறேன். "1967-ம் ஆண்டு தேர்தல் நேரத்தில் தேர்தல் முடிவுக்கு பிறகு பஞ்சாப், உத்தரப்பிரதேசம், பீகார் ஆகிய மூன்று மாநிலங்களிலும் அகாலி தளம், பாரதீய கிராந்தி தளம், ஜனசங்கம் அடங்கிய கூட்டணி அரசில் இந்திய கம்ïனிஸ்டு கட்சி அங்கம் வகித்தது. ஆர்.எஸ்.எஸ். கட்சியினுடைய நிழல் என்று சொல்லப்படுகின்ற ஜனசங்கம், பாரதீய கிரந்தி தளம், அகாலி தளம் ஆகிய இந்த கட்சிகள் எல்லாம் பங்கு பெற்ற அரசில் சி.பி.ஐ. கட்சி அங்கம் வகித்தது. மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சி அந்த அணியிலே பங்கு பெற மறுத்துவிட்டது. ஆனால், அந்த அரசுகளுக்கு நிபந்தனையோடு கூடிய ஆதரவை அளிக்க மார்க்சிஸ்ட் கட்சி ஒப்புக் கொண்டது. கே.சுப்பராயன்:- முதல்-அமைச்சர் சொல்வது உண்மை தான். ஆனால் இந்திய கம்ïனிஸ்டு கட்சியினுடைய ஒரு மாநிலக் குழு தீர்மானித்து, அப்படி பங்கு பெற்றது தவறு என்று மத்திய தலைமை சுட்டிக்காட்டியிருக்கிறது. எனவே, அதை இந்திய கம்ïனிஸ்டு கட்சியினுடைய அதிகாரபூர்வமான கருத்தாக எடுத்துக் கொள்ள இயலாது. கருணாநிதி:- நான் அந்த அரசில் அங்கம் வகித்தார்கள் என்று தான் சொன்னேன். அது மாநிலக் குழுவா, மத்தியக் குழுவா என்பதெல்லாம் அல்ல. அப்படிப்பட்ட அரசில் ஜனசங்கம் இருந்த அரசில், சி.பி.ஐ. அங்கம் வகித்தது என்பது தான். பிறகு, 1977-ல் நடந்த தேர்தலில் மத்தியில் மொரார்ஜி தேசாய் தலைமையிலே ஜனதா அரசு அமைந்தது. ஜனதாவிலே இடம் பெற்ற கட்சிகளில் ஒன்று ஜனசங்கம். அந்த அரசில் வாஜ்பாய், அத்வானி, நானாஜி தேஷ்முக் ஆகியோர் இடம் பெற்றிருந்தார்கள். மார்க்சிஸ்ட் கட்சி வெளியே இருந்து அரசுக்கு ஆதரவு கொடுத்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. 1989-90-ல் வி.பி.சிங் தலைமையிலே மத்தியில் ஆட்சி. அப்போது சி.பி.எம்., பா.ஜ.க., இரண்டுமே வெளியே இருந்து வி.பி.சிங் ஆட்சியை ஆதரித்தார்கள்'' என்று சட்டப் பேரவையில் அப்போதே நான் பேசியிருக்கிறேன். இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.
|
| < முந்தைய | அடுத்த > |
|---|





தி.மு.க. தோழமை அணியில் இருந்து விலக மார்க்சிஸ்ட் கட்சியினர் ஏற்கனவே திட்டமிட்டு விட்டார்கள் என்று முதல்- அமைச்சர் கருணாநிதி கூறியிருக்கிறார்.
