| படையினரின் அண்மைக்கால நடவடிக்கைகளால் மட்டக்களப்பு மக்கள் மத்தியில் அச்ச நிலைமை |
|
|
| வா.கி.குமார் | |
| 28. September 2008 13:50 | |
|
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; கிழக்கில் தற்போது ஜனநாயக சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் மக்கள் நிம்மதியாக வாழ்வதாகவும் அரசு பிரசாரம் செய்து வருகின்றது. ஆனால், அங்கு நிலைமை வழமைக்கு மாறாகவே உள்ளது. கிழக்கு மாகாணம் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்ததன் பின்னர் மக்கள் தமது சுதந்திரத்தை இழந்துள்ளனர். போர்ச் சூழல் இருந்த காலகட்டத்தைவிட நிலைமை தற்போது மிக மோசமாக உள்ளது. குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கொலை, ஆட்கடத்தல், கைது, பாலியல் வல்லுறவு என்பன தொடர்ந்த வண்ணமே உள்ளன. தினமும் சுற்றிவளைப்புகளும் கைதுகளும் இடம்பெற்று வருகின்றன. கிராமம் கிராமமாக இச்சுற்றிவளைப்பு இடம்பெறுகின்றது. நீண்ட காலமாக விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த படுவான்கரை மற்றும் வாகரைப் பிரதேசங்களிலும் தற்போது படையினரின் சுற்றி வளைப்பு அதிகரித்துள்ளது. ஆண், பெண் மற்றும் வயது வித்தியாசமின்றி மக்களை அழைத்துச் சென்று பொது இடத்தில் தடுத்து வைக்கின்றனர். காலைக்கடன்களைக்கூட முடிக்காத உபாதையில் அவர்கள் நீண்ட நேரம் தடுத்து வைக்கப்படுகின்றனர். அதன் பின் தலையாட்டிகள் கொண்டுவரப்பட்டு அடையாளம் காட்டப்பட்டு கைதுகள் இடம்பெறுகின்றன. இந்த தலையாட்டிகளாக உள்ளவர்கள் அங்குள்ள துணை இராணுவக் குழுவைச் சேர்ந்தவர்கள் என மக்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறான சுற்றி வளைப்பு மற்றும் கைது என்பனவற்றால் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இச்சுற்றிவளைப்பு காரணமாக அரச ஊழியர்கள் பாடசாலை மாணவர்கள் மற்றும் அன்றாடம் தொழில் செய்து வாழும் பொது மக்கள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.கடந்த வாரத்தில் இடம்பெற்ற சுற்றிவளைப்புகளின்போது பல அப்பாவி இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கிழக்கில் ஜனநாயகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அங்கு மக்கள் நிம்மதியாக வாழ்கின்றனர் என அரசாங்கம் கூறி வருகின்ற போதிலும் மக்கள் தமது ஜனநாயக உரிமைகள் அனைத்தையும் இழந்த நிலையில் அச்சத்துடனேயே வாழ்ந்து வருகின்றனர். மிக மோசமான அச்சம் நிலவிய 1990 ஆம் ஆண்டு காலத்தைப்போன்ற ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர். தற்போது கிழக்கில் அரசாங்கம் தனது சுய ரூபத்தைக் காட்டத் தொடங்கியுள்ளதை மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர். மாகாண சபை இயங்கி வந்தாலும் அதில் அதிகாரத்தில் உள்ளவர்களிடம் எதுவுமில்லை. அனைத்தும் அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே நடைபெற்று வருகின்றது. கிழக்கில் நிம்மதியாக வாழ்ந்த மக்கள் அதிலும் குறிப்பாக படுவான்கரைப் பகுதியில் சுதந்திரமாக வாழ்ந்த மக்கள் தற்போது இராணுவ ஆக்கிரமிப்புக்குள் சிக்கித் தவித்து அச்ச நிலையில் வாழ்ந்து வருகின்றனர். நகரப் பகுதியில் கூட மக்கள் சுதந்திரமாக நடமாட முடியாத நிலை தோன்றியுள்ளது. புதிய சோதனைச் சாவடிகள் பல அமைக்கப்பட்டு வீதியெங்கும் மக்கள் சோதனையிடப்படுகின்றனர். இதனால்இ சாதாரண மக்களின் இயல்பு வாழ்க்கை தினமும் பாதிக்கப்படுகின்றது. மக்களை அச்சுறுத்தும் படையினரின் இவ்வாறான நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும்.
|
| < முந்தைய | அடுத்த > |
|---|






மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் படையினரின் சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கைகள் காரணமாக பொது மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமென்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார்.
